Step into an infinite world of stories
ராஜாஜி பக்தர் கல்கி என்பது பலருக்கும் தெரியும். ஆனால் ராஜாஜியுடன் சரிநிகர் சமானமாகப் பேசி வாதம் புரியும் உரிமை பெற்ற மிகச் சிலருள் கல்கி ஒருவர் என்பது பெரும்பாலோருக்குத் தெரியாது. முதியவருடன் பல சந்தர்ப்பங்களில் கருத்து வேற்றுமை கொண்டு கல்கி பேசிய போதிலும் இறுதியாகத் தலைவர் ஒரு முடிவெடுத்த பிறகு தொண்டர் அதனை சிரமேற்கொண்டு நடப்பார். தலைவரை எப்பேர்ப்பட்ட எதிர்ப்பினிடையிலும் விட்டுக் கொடுக்காமல் பக்கபலமாக நிற்பார். கடைசி வரை அவருக்காகப் போராடுவார்.
'முஸ்லீம்களின் பாகிஸ்தான் கோரிக்கையைக் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டு இந்தியாவில் தேசிய சர்க்கார் ஏற்படுவதைச் சாத்தியமாக்க வேண்டும்' என்று ராஜாஜி 1942 -ல் சொன்னபோது அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. ராஜாஜி கூறியதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமலும் வேண்டுமென்றே திரித்துக் கூறியும் அவர் மீது துவேஷத்தைப் பலர் வளர்த்தார்கள். ஏறத்தாழ அவரைத் தேசத்துரோகி என்று கூறுமளவுக்குக்கூடப் போய்விட்டார்கள்.
இந்தப் பலமான எதிர்ப்பைச் சமாளிக்க, பதிலடி கொடுக்க, அப்போது மாதம் இரு முறையாக வெளி வந்து கொண்டிருந்த கல்கி பத்திரிகை “கல்கி”க்குப் போதுமானதாக இல்லை. சிறு செய்தித்தாள் வடிவில் துணை கல்கி ஒன்றினை வாரம் இருமுறை வெளியீடாகப் பிரசுரித்தார். இதில் ராஜாஜி ஆதரவுப் பிரசாரம் தவிர, உள்நாட்டு வெளிநாட்டு அரசியல் நிலவரங்கள், யுத்தச் செய்திகள் முதலியன வெளிவந்தன. இதன் விற்பனையை மேலும் அதிகரிக்க மகுடபதி என்ற நாவலைத் தொடங்கினார். துணை நின்ற துணைக் கல்கிக்கு இந்தத் தொடர்கதை துணை நின்றது.
சுதந்திரப் போர்வீரர் “கல்கி” தேசிய எழுச்சியின் அடிப்படையில் தோற்றுவித்தவைதாம் கல்கி பத்திரிகையும் துணைக் கல்கியும். எனவே தேசபக்தன் ஒருவனையே கதாநாயகனாகக் கொண்டு “மகுடபதி” என்ற தலைப்பில் அவர் கதை புனைந்ததில் வியப்பேதுமில்லை. கல்கிக்கே உரித்தான நடை, கவிதை சொல்லும் உத்திகள், மர்மங்கள், திடீர் திருப்பங்கள் எல்லாம் அமையப் பெற்று வாசகர்களைப் பரபரப்பில் ஆழ்த்தி, படித்து முடிக்கும்வரை கீழேவைக்க இயலாத ஆர்வத்தை ஊட்டுகிறது நாவல்.
Release date
Audiobook: 5 May 2022
English
India