Step into an infinite world of stories
Fiction
வணக்கம்.
‘‘இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதல்முறையாகத் திரைக்கு வந்து சில தினங்களே ஆன...‘ என்று அறிவிப்பதைப் போல நானும் தெரிவிக்க விரும்புகிறேன். இந்திய இதழியல் வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு வார இதழில் வெளிவந்துகொண்டிருந்த ‘காலம்’ (கருத்துப் பத்தி), இன்னொரு வார இதழுக்கு இடம் மாறிய ‘பெருமை’க்குரியது என்னுடைய ‘ஓ’ பக்கங்கள். அதற்குக் காரணமான சில கட்டுரைகள் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன.
இதழியல் வரலாற்றில் எனக்கு இன்னும் சில ‘பெருமைக’ளும்’ உண்டு. நான் வேலை பார்த்த பத்திரிகையிலேயே (முரசொலி) என்னை விமர்சித்து கார்ட்டூன் போடப்பட்டது. என் கட்டுரையைக் கண்டிப்பதற்காக பெரும் தொகை செலவிட்டு ஒரு பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தப் ‘பெருமை’களையெல்லாம் எனக்கு அளித்த தி.மு.கவை ஆதரித்து ஒரு காலத்தில் நான் தேர்தல் பிரசாரம் செய்திருக்கிறேன் என்பதும் நினைவுகூரத்தக்கது.
தி.மு.கவையும் கலைஞர் கருணாநிதியையும் விமர்சித்துத் தாக்குவதற்கு மட்டுமே நான் அதிகமான ‘ஓ’ பக்கக் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன் என்று ஓர் அவதூறு தொடர்ந்து, குறிப்பாக இணைய வலைப்பூக்களில் பரப்பப்படுகிறது. அது பொய்யானது என்பதை இந்தத் தொகுப்பே நிரூபிக்கும். சமூகத்தைப் பாதிக்கும் சகல விஷயங்கள் பற்றியும் எனக்கு அக்கறை உண்டு என்பதற்கு அடையாளமாக இதில் பல துறை பற்றிய கட்டுரைகள் உள்ளன. தி.மு.க, கருணாநிதி பற்றிய கட்டுரைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். இவை அத்தனையும் ஓராண்டில் (2007) வாராவாரம் எழுதியவை.
எல்லா விஷயங்களும் விவாதிக்கப்படவேண்டும். எதுவும் புனிதமானதோ விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதோ அல்ல. எதற்கும் உணர்ச்சிவசப்படுவது, நாம் உயிரோடு இருக்கிறோம் என்பதை மட்டுமே காட்டும். ஆனால் அது மட்டுமே எந்தத் தீர்வையும் தராது. அறிவுப்பூர்வமான அணுகுமுறையில்தான் தீர்வை அடைய முடியும். பரஸ்பர அன்பும் மதிப்பும் சமத்துவமும் ஒருவருக்கொருவர் காட்டும் சமூகமே நமது கனவு. இதற்குத் தடையாக இருக்கும் எல்லாம் அடையாளம் காணப்படவேன்டும். என் ஒவ்வொரு எழுத்துக்கும் பின்னால் இருக்கும் என் பார்வையும் நோக்கமும் இதுவே.
பல விதமான அரசியல் நிர்ப்பந்தங்களை நீண்ட காலம் தாக்குப் பிடித்து என் கட்டுரைகளை வெளியிட்டு வந்த ஆனந்தவிகடன் இதழுக்கு என் நன்றி. இத்தொகுப்பின் மூலம் என் புத்தகங்களை வெளியிடத் தொடங்கியிருக்கும் கிழக்கு பதிப்பகத்துக்கு என் நன்றி. என் ஆதர்சங்களான பாரதி, பெரியார் ஆகியோருக்கும், என்னைத் தொடர்ந்து இயங்கவைத்திருக்கும் எண்ணற்ற வாசகர்களுக்கும் இந்தத் தொகுப்பைக் காணிக்கையாக்குகிறேன்.
-ஞாநி
Release date
Ebook: 30 September 2020
English
India